posted 29th October 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
அத்தியாயம் 1:
தோல்விதான் உங்கள் வெற்றிப்படி – எப்படி? | Mind-Blowing Thoughts on Overcoming Failure
அப்படியென்றால், தோல்வியை வெற்றிப்படி ஆக்குங்கள் எப்படி என்பதுதான் இன்றைய அத்தியாயத்தில் சொல்லப் போவதும் அதுதான்.
தோற்று விட்டீர்களா? நீங்கள் தோற்றுப் போனீர்களா? யார் சொன்னது?
இப்படியான உங்கள் மனதினை உலுக்கும் கேள்விகள் உங்களது வாழ்க்கையினைப் புரட்டிப் போட்டிருக்குமே!
கொஞ்சம் பொறுங்கள். இதற்குத்தான் நான் வந்து இருக்கின்றேன், சொன்னவற்றினை, சொன்னவர்களைப் புரட்டுவதற்காக.
வணக்கம் நண்பர்களே! இது தேனாரத்தின் குரல்.
உங்கள் வாழ்க்கையின் அத்தியாயங்களைத் தகடு பொடியாக்கி, உங்களை அடிக்கு மேல் அடி அடித்ததினாலான காயங்களின் வலியினை ஆற்றுவதற்கே தேனாரத்தின் குரல் தொனிக்கின்றது.
தீராத நோவு, மாறாத வலி, ஒட்டிப் பிறந்த உறவுகளாலோ அல்லது ஒட்டிக் கொள்ள வந்த மறுக்களாலோ உருவாகி இருக்கலாம். இது வரைக்கும் அவை உங்களுக்கு மேல் அமர்ந்துள்ள சுமைகளாகக் கூட இருக்கலாம். இனி அவற்றினை நீங்களே விரட்டி அடிக்கப் போகின்றீர்கள். இல்லை இல்லை. வெகு விரைவில் அடித்து துரத்தி விடுவீர்கள்.
இது உங்களுடைய வாழ்க்கை, அதனைத் தட்டிப் பறிப்பதற்கு, தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுவதற்கு இவர்கள் யார்?
இதை ஒருமுறை கேளுங்கள். இது ஒரு கதையல்ல, வாழ்க்கையின் சுருக்கம். வாழ்க்கை எனக்குக் காட்டிய வதைமுகாமில் சிந்திய கண்ணீர்த் துளிகளின் அயறுகள் இவை.
என்னை ஒரு முறை அல்ல, பல சகாப்தங்களாக அடித்தார்கள், துவைத்தார்கள். மனத்தினை உடைத்தார்கள். மானத்தினை வாங்கினார்கள். எவ்வளவோ கொடுமை. ஒன்றின் பின் ஒன்றாக அல்ல, அவை எல்லாமே ஒரே நேரத்தில், ஆனால், பல சகாப்தங்களாக, நினையாத நேரத்தில், காலம் பார்க்காமல், என்னை வந்து தாக்கின.
வாழ்க்கையோ சாவினைக் காட்டியது. நரகம் என்றால் இதுவெனக் காண்பித்தது.
ஆரம்பத்தில் நானும் முடங்கினேன், உங்களைப் போல. எவரினதும் துணையின்றி உயிர் அடங்கியது போலக் கிடந்தேன்.
ஆனால், எனக்கோ, ஏனோ, பயமோ வரவில்லை. மனம் திடமாக இருந்தது.
இவ்வளவும் நடந்தாலும், நான் துவண்டேனா? மூலையில் தொடர்ந்து முடங்கிக் கிடந்தேனா?
நானோ ஒருவரையும் எதிர்க்கவில்லை. மாறாக அமைதியாகவே இருந்தேன், வார்த்தைகளை விடவில்லை. வாதைகளை மற்றவருடன் பகிரவுமில்லை.
இத்தனை பிரச்சினைகளுக்கும் எனது மூளையின் ஒரு மூலையில்தான் இடம் கொடுத்தேன். அதுவும் தற்காலிகமாகத்தான்.
ஆனால், எனது மூளையோ இரவு பகலாக ஒவ்வொரு கணமும் ஓய்வின்றி விடைகளை மட்டும் தேடிக் கொண்டிருந்தது.
இப்படியான சந்தர்ப்பங்களில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்? என்றோ ஒருநாள், ஒரு கணம், ஏன், எதற்கு, எதனாலே இவையெல்லாம் எனக்கு நடக்கின்றன என்று நீங்கள் சிந்தித்தீர்களா?
சரி விட்டு விடுங்கள். ஆனால், இப்போதே, இப்படியாக நீங்கள் துவண்ட காலங்களைச் சிந்திக்காமல் விட்டாலும், ஒரு மூலையில் அதன் பக்கங்கள் ஒவ்வொன்றாய் புரண்டு கொண்டிருந்தாலும் அவற்றினை மறப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எப்படியாகிலும், அவை கொடுத்த வடுக்களின் வலிகளை உதாசீனம் செய்ய முடியாமல் இருக்கின்றதே என்றாலும், ஒரு பக்கமாக அவற்றினை ஒதுக்கி வையுங்கள்.
இப்போதுதான் நான் வந்து விட்டேனே, உங்களது காயங்களை மாற்றுவதற்கும், வலிகளை இல்லாமல் ஆக்குவதற்கும்.
உங்களுக்கோ ஒருவரால் மட்டும் உபாதைகள் வந்திருக்கலாம். அது ஒரு சில காலங்களாக மட்டும் இருக்கலாம். இந்த இடத்தில் என்னை நினையுங்கள்.
நடந்தவை கடந்தவைகளாக இருக்கட்டும். ஆனால், அந்த கொடிய நினைவுகளை எவ்வாறு மறப்பது என்று கூட இப்போதும் நீங்கள் மீண்டும், மீண்டும் நினைக்கலாம். உண்மைதான். மறக்க முடியாததுதான். அவைகள் எவையும் ஜீரணக்கப்படாதவைகள்தான்.
உங்களுக்கு ஏற்பட்ட வாதைகள் அனைத்தையையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மனத்தினுள் கொண்டு சென்று உங்களையே ஊனமாக்காதீர்கள். உடலில் விழுந்த தூசியினைத் தட்டுவது போன்று தட்டி விடுங்கள். ஆனால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவற்றையெல்லாம் உங்கள் வாழ்க்கையின் சிகரத்திற்கு உங்களைக் கூட்டிச் செல்லும் படிக்கட்டுகளாக்குங்கள்.
இது உங்களது வாழ்க்கை. இது நீங்கள் கோர்த்து வைத்த விலைமதிப்பற்ற ஒரு புத்தகமாக இப்போது உங்கள் முன் வெளிவந்துள்ளது. இந்த உங்கள் நூலானது உலகத்தின் எந்த மூலையிலும் கிடைக்காது.
நானும் தோற்கடிக்கப்பட்டேன்தான். ஒருமுறை அல்ல. பல சகாப்தங்களாக. ஆனால், அமைதியைக் காத்தேன். மெதுவாக எழும்பினேன், எவரும் என்னை அவதானிக்காமல் இருக்கையிலே.
நீங்கள் இவ்வாறு செய்தீர்களா? இல்லைதானே! முயலுங்கள்.
காலம் இன்னமும் போகவில்லை. எக்கணமும் விரையம் ஆகாதவாறு இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். விரையுங்கள். விளித்தெழும்புங்கள்.
மௌனத்தால் வெல்லுங்கள். உங்களின் வெற்றி, உங்களை வாட்டியவர்களைத் துவைக்கும். உங்களின் உயர்வு துவைத்தவர்களின் அழிவாகும் என்பதனை நீங்கள் நினைக்கா விட்டாலும் படைத்தவன் பார்த்துக் கொள்ளுவான்.
உங்கள் அமைதிதான் உலகின் மிகப் பெரிய பலமான ஆயுதம். எந்த எதிரியாலும் அந்த அமைதியின் வலிமையினை எதிர் கொள்ளவே முடியாது.
என்னைப் பாருங்கள். என் இதயம் இன்னமும் அதேபோலவே துடித்துக் கொண்டிருக்கின்றது. ஓயவுமில்லை. ஓய்வெடுக்க அது நினைக்கவுமில்லை. நானோ அதற்கு உரமேற்றிக் கொண்டுதான் இருந்தேன், இப்பவும் இருக்கின்றேன்.
எனது மூளை பல சகாப்தங்களாக ஓய்வெடுக்கவேயில்லை. 8 மணி நேர தூக்கம் தேவையென்பதனை விஞ்ஞானிகள் ஆதார பூர்வமாக எடுத்தியம்பினார்கள். ஆனால், அதனை நான் என் வாழ்க்கையில் பொய்யாக்கினேன்.
நானோ, எனது வாழ்க்கையினை 8 மணி நேர அட்டவணையின் படி வாழ அனுமதிக்கவேயில்லை. மூன்றரை மணி நேர வாழ்க்கைதான் என முடி வெடுத்தேன். வாழ்ந்து கொண்டும் இருக்கின்றேன்.
உங்களுக்கோ உங்கள் வாழ்க்கையினை வடிவமைக்க முழு உரிமையும் உண்டு. நீங்களே அதற்கு வழி சமையுங்கள்.
உங்களை நீங்கள் கட்டுப்படுத்தலாமே ஒழிய, வேறு எவராலுமல்லவே என்பதனை நிரூபியுங்கள். அதற்காக எதிர்ப்பு செய்யாதீர்கள். அமைதியாக நகர்த்துங்கள். அப்போது தெரியும் தோற்றவர்கள் யார் என்று.
"இதன் தொடர்ச்சியாக, என் மன ஓட்டத்திலிருந்து உதித்த ஒரு சிறிய கவிதையை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். அமைதியாகச் சிந்தியுங்கள்”
தோல்வியில்லை, தோல்வியில்லை
வாழ்க்கைக்கு இனிக் கேள்வியில்லை
சிறிதளவாய் நான் சொல்ல
பல மடங்காய் பெருக்கிக் கொள்ளு
கொஞ்சத்தைக் காற்றில் விடுவேன்
மிகுதியாக்கி உட் சுவாசி!
இரத்ததில் அவை கலந்திடவே
உணர்வுகள் உயிர் பெறட்டும்!
வாழ்க்கையினை செழிக்க வைக்க
என் வார்த்தைகளை உரமாக்கு!
தொலைந்து போன காலங்களை கசக்கி எறி
புதிதாகப் பூத்த வாழ்வை உனதாக்கு!
*மீண்டும் நீ பிறந்துவிட்டாய்
புதிய வாழ்க்கையினைப் பெற்றுக் கொண்டாய்!
நீயாக நீ வாழு உருக்கான மனத்துடன் ஜெயித்து விட்டாய்
ஊக்கத்தினை உயிராக்கி வாழ்வுலகை உனதாக்கு!
வீழ்ச்சியில் விழித்தெழும்புங்கள். வீழ்ந்த இடத்தைத் தட்டி மெழுகுங்கள்.
நோகடிக்கப்பட்ட உங்கள் மனதிற்கு ஆறுதல் அளியுங்கள், அதனை மருந்தாக்கி குணமளியுங்கள்.
உங்களை எந்தச் சொற்கள் வாட்டியதோ, அந்தச் சொல்லுக்கு எதிரான சொல்லை வாழ்க்கை ஆக்குங்கள். உதாரணமாக, உங்களை உதாவாக்கரை என்று தூற்றி இருந்தால், நீங்கள், ஊரே மகிமைப் படுத்தும்படி உங்களை மாற்றுங்கள். உங்களை விட்டு நெருங்கியோர் பிரிந்திருந்தால், இதனால் உங்களை இராசி இல்லாதவன் என்று உங்கள் பெயரைக் கெடுத்திருந்தால், நீங்களே உங்களைச் சுற்றி நல்லுறவான மனிதரை சம்பாதியுங்கள்.
இப்போது அனைவர் முன்னாலும் அமைதியாக நிமிருங்கள். நீங்கள் நிமிர்ந்தால், மற்றவை அனைத்தும் உங்கள் முன் குறுகும்.
உங்கள் சிந்தையில் இந்தப் பாடம் எக்கணமும் படமாக ஓடட்டும். ஓடிக் கொண்டே இருக்கட்டும். ஓடிக் கொண்டே இருக்கவும் வேண்டும்.
அடுத்த அத்தியாயத்தில், மௌனத்தினால் எவற்றினையெல்லாம் ஜெயிக்கலாம் என்பதனையும், அதனால், உங்கள் வாழ்க்கையினை மாபெரும் சிம்மாசனமாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசப் போகிறேன். அதுவரை காத்திருங்கள்.
மீண்டும் உங்கள் அனைவரையும் தேனாரத்தின் குரலில் சந்திக்கின்றேன்.
வணக்கம் நண்பர்களே!
வாழ்க்கை வளம்பெற எனது வாழ்த்துக்கள்.